ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குடி அருகே பெரியார் சிலையை மர்மநபர்கள் உடைத்தனர். இதை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-20 23:15 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது புதுக்கோட்டை விடுதி கிராமம். இங்குள்ள குளம் அருகே பெரியார் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 2013-ம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்த சிலையை திராவிடர் கழகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பெரியார் சிலையின் தலையை உடைத்து தனியாக துண்டித்துள்ளனர். மேலும் சிலையின் கையில் இருந்த தடியையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

நேற்று காலையில் இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆலங்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையில் சிலையில் இருந்து உடைத்து எடுக்கப்பட்ட தலையை அந்த பகுதி பொதுமக்கள் எடுத்து வந்து ஒட்டி சரி செய்தனர். பின்னர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் திராவிடர் விடுதலை கழக புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பூபதி கார்த்திகேயன் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலையை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. பெரியார் சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு யார் யார் வந்து சென்றார்கள் என்பது குறித்து செல்போன் சிக்னல்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், பெரியார் சிலையை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆலங்குடியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஆலங்குடி வடகாடு முக்கம் வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் ராவணன் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. நகர செயலாளர் பழனிக்குமார், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கமணி, திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிலை உடைப்பு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சிலை உடைப்பு தொடர்பாக ஓய்வு பெற்ற சிறைக்காவலர் சரவணமுத்து மகன் செந்தில்(வயது 35) என்பவரை ஆலங்குடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில், மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த அவர், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு பெரியார் சிலையை உடைத்ததாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்