கயத்தாறில் பொக்லைன் எந்திரம் மூலம் பழமைவாய்ந்த கல்மண்டபத்தை தரைமட்டமாக்கி கிரானைட் கற்கள் கொள்ளை

கயத்தாறில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த கல் மண்டபத்தை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தரைமட்டமாக்கி, கிரானைட் கற்களை கொள்ளை அடித்து சென்றனர்.

Update: 2018-03-20 21:30 GMT
கயத்தாறு,

கயத்தாறில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த கல் மண்டபத்தை மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தரைமட்டமாக்கி, கிரானைட் கற்களை கொள்ளை அடித்து சென்றனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட் கற்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழமைவாய்ந்த கல் மண்டபம்

கயத்தாறு நாற்கர சாலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகில் கல் மண்டபம் இருந்தது. சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த மண்டபமானது, மஞ்சள் கிரானைட் வகை கற்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் காளமேக புலவர் தங்கியிருந்து பல்வேறு பாடல்களை இயற்றி உள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு இந்த மண்டபத்தின் தூண்களை சிலர் பெயர்த்து எடுத்து, கிரேன் மூலம் தூக்கி சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த தூண்களை ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து பறிமுதல் செய்து, கயத்தாறு போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்துள்ளனர்.

தரைமட்டமானது

இந்த நிலையில் பயன்பாடற்ற நிலையில் இருந்த அந்த கல் மண்டபத்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலர் இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.

பின்னர் அங்கிருந்த பெரிய கிரானைட் கற்களை கொள்ளை அடித்து சென்றனர். அங்கு கல் மண்டபம் இருந்த சுவடே தெரியாமல் கற்களின் குவியலாக காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வரலாற்று சிறப்புமிக்க கயத்தாறு பகுதியில் இருந்த கல் மண்டபத்தை தரை மட்டமாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட் கற்களை மீட்டு, அங்கு மீண்டும் கல் மண்டபத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்