தாயுடன் நடந்து சென்ற சிறுவன் வெட்டிக்கொலை: தொழிலாளிக்கு தூக்குத்தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

தாயுடன் நடந்து சென்ற சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update: 2018-03-20 21:30 GMT
நெல்லை,

தாயுடன் நடந்து சென்ற சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு தூக்குத்தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நடத்தையில் சந்தேகம்

நெல்லை பேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 38). இவரது மனைவி பிரேமா (30). இவர்களுக்கு கல்பனா (12) என்ற மகளும், தருண் மாதவ் (5) என்ற மகனும் இருந்தனர். இசக்கியப்பன் கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். பிரேமா குழந்தைகளுடன் பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இவர்களுடைய பக்கத்து வீட்டில் வசித்தவர் ஆறுமுகம் (32). தொழிலாளியான ஆறுமுகத்துக்கு, பிரேமா மும்பையை சேர்ந்த தனது உறவினரான கலாவை (28) திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். திருமணம் முடிந்த பிறகு, கலாவின் நடத்தையில் ஆறுமுகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் ஆறுமுகம், கலாவை அடித்து உதைத்ததால், கலா தனது குழந்தையுடன் மும்பைக்கு சென்றுவிட்டார்.

சிறுவன் கொலை

இதனால் ஆறுமுகத்துக்கு, பிரேமா மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 8.9.2016 அன்று பிரேமா பள்ளியில் இருந்து தனது மகன் தருண் மாதவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்று தகராறு செய்த ஆறுமுகம் பிரேமா மற்றும் தருண் மாதவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய ஆறுமுகம் மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரேமா, தருண் மாதவ் மற்றும் ஆறுமுகத்தை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தருண் மாதவ் பரிதாபமாக இறந்தான்.

தூக்குத்தண்டனை


இந்த சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் ஆறுமுகம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தை போலீசார் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஆறுமுகத்துக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு அளித்தார். இதையடுத்து ஆறுமுகம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்