காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2018-03-21 04:30 IST
தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட த.மா.கா. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். தேர்தல் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், கருப்பண்ண உடையார், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து விவசாயிகளின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையினை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.


ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர விபத்து சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் காட்டாறுகளை ஆய்வுசெய்து தடுப்பணைகள் அமைக்க வேண்டும். தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலத்தை சீரமைப்பு வல்லுனர்கள் கொண்டு ஆய்வு செய்து உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். தஞ்சை வழியாக சென்னைக்கு இயக்கப்படட மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் அவதியுறும் மக்களுக்காக தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதி விரைவு ரெயில் பகல் நேரத்தில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அசோக்குமார், இணை செயலாளர் சாதிக்அலி, மகளிரணி துணைத்தலைவி கன்னியாதேவி, தஞ்சை மாநகர தலைவர் ராஜவேலு, கும்பகோணம் நகர தலைவர் சங்கர், மாநில மகளிரணி செயலாளர் தேவிகாஜெயக்குமார், மாநில இளைஞரணி இணை செயலாளர் சங்கர்லால், மாவட்ட பொதுச்செயலாளர் ராம்மோகன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் அன்பழகன், தெற்கு ஒன்றிய தலைவர் சதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திருச்செந்தில், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்