வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் அப்ரண்டிஸ் பயிற்சி

திறமை, கடின உழைப்பு, விடா முயற்சியுள்ள ஒரு பயிற்சியாளர் பிற்காலத்தில் ஒரு தொழில் நிறுவனத் தலைவராகி பலருக்கு வேலையளிக்கும் நிலைக்கு உயரலாம்.

Update: 2018-03-20 06:55 GMT
டித்து முடித்துவிட்டு கையில் சான்றிதழுடன் நிற்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் முன்பாக நிற்கின்ற மிகப் பெரிய சவால் ‘வேலைவாய்ப்பு’. ஒவ்வொரு நிறுவனமாக வேலை வாய்ப்பைத் தேடி அலைந்தால், முன் அனுபவம் இருக்கிறதா? என்று கேட்டு திரும்ப அனுப்பிவிடுகிறார்கள். வேலைக்குச் சேரும் முன்பு, எங்கே ‘முன் அனுபவம்’ பெறுவது? அதற்கும் வழியிருக்கிறது. அதுதான் அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழகுனர் பயிற்சி.

வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு எல்லோராலும் எதையும் சாதித்துவிட முடியாது. அனுபவம் மட்டுமே ஒருவனை சாதனையாளராக மாற்றும். அந்த அனுபவம் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சியின் மூலம் கிடைக்கிறது. உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இதற்காக ‘போர்டு ஆப் அப்ரண்டிசிப் டிரெயினிங்’ என்ற தனி அமைப்பு செயல்படுவது பலருக்குத் தெரிவதில்லை. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வித் துறையின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. சென்னை தரமணியில், இந்த அமைப்பின் தென் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம், புதுச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் உள்ள மத்திய - மாநில தனியார் தொழில் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், வங்கிகள் போன்றவற்றில் குறிப்பிட்ட கல்வித் தேர்ச்சி பெற்றவர்களை பயிற்சிப் பணியில் சேர்த்து முன் அனுபவம் பெற்றுத் தருவதே இந்த அமைப்பின் பணியாகும். என்ஜினீயரிங் பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், பிளஸ்-2 தொழில் சார்ந்த கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் பழகுனர்களாக தங்கள் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

இவர்களுக்கு தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்கத் தொகை கிடைக்கும். என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் சுமார் ஐந்தாயிரமும், பிளஸ்-2 படித்தவர்களுக்கு சுமார் 3 ஆயிரமும் ஊக்கத் தொகையாக கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள இந்தத் தொகையைக் காட்டிலும் அதிக அளவு தொகையை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன என்பதும் கவனிக்கத் தக்கது. இந்த தொகையை தொழில் பழகுனர்களுக்கு வழங்குவதற்காக ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை தென்மண்டல நிறுவனங் களுக்கு வழங்கப்படுகிறது.

மொத்தத்தில் தொழில் பழகுனர் பயிற்சியானது ஒருவரின் இயல்பான அலுவலகப் பயத்தை போக்கி தன்னம்பிக்கை அளிக்கிறது. செயல் திறனை ஊக்குவிக்கிறது. திறமை, கடின உழைப்பு, விடா முயற்சியுள்ள ஒரு பயிற்சியாளர் பிற்காலத்தில் ஒரு தொழில் நிறுவனத் தலைவராகி பலருக்கு வேலையளிக்கும் நிலைக்கு உயரலாம்.

தொழில்கல்வி பயின்றவர்களை தேர்வு செய்வதற்காக நேர்காணல் முகாம்களும் நடத்தப்படுவது உண்டு. அதுகுறித்து அவ்வப்போது பத்திரிகையில் அறிவிப்புகளாக வெளியிடப் படும். இது வேலை தேடு பவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களைப் பெற பல்வேறு நிறுவனங்கள் நேரில் வந்து தொழில் பழகுனர்களை சந்திக்கின்றன. இதேபோல தொழில்நிறுவனங்களின் ஒன்றிணைந்த கருத்தாய்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பு தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம். www.boatsrp.com என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்தும் தொழில் பழகுனர் பயிற்சி வாய்ப்பை எதிர்நோக்கலாம்.

அரசு சார்ந்த துறைமுகம், பி.எஸ்.என்.எல்., ரெயில்வே, பெல், ஆவடி டாங்கி தொழிற்சாலை, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, இஸ்ரோ, மின்வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, பஞ்சாயத்துராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் தொழில் பழகுனர் பயிற்சி தருகிறார்கள்.

பல தனியார் நிறுவனங்களும் பயிற்சி வழங்குகின்றன. சிறப்பாக பணிபுரிபவர்களை தனியார் நிறுவனங்கள் பணி நிரந்தரம் செய்து கொள்கின்றன. இது பற்றிய விவரங்களை www.boatsrapprentice.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்