திருப்பூர் மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்த 6 பேர் கைது

திருப்பூர் மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கி இருந்த 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, முகமூடிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-03-19 22:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகர பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கயல்விழி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்துப்பணியை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் திருப்பூர் வடக்கு உதவி கமிஷனர் அண்ணாத்துரை, வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சையத் பாபு ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் ஊத்துக்குளி ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது எஸ்.ஆர்.சி. மில் அருகே உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர். பின்னர் அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள், மிளகாய் பொடி, முகமூடிகள் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். அவர்கள் 6 பேரும் சேர்ந்து திருப்பூர் மாநகரில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சிவா(வயது 20), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த தினேஷ்குமார்(34), ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த கார்த்திக்(28), மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(21), திருப்பூர் ராயபுரம் பெத்திசெட்டிபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(30), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த ராஜ்குமார்(30) என்பது தெரியவந்தது. அவர்கள் 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்