திம்பம் மலை அடிவாரத்தில் புலி நடமாட்டம் வாகனஓட்டிகள் அச்சம்
திம்பம் மலை அடிவாரத்தில் புலி நடமாட்டம் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம், மார்ச்.20-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலி, மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி அடிக்கடி வனப்பகுதியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல ரோட்டை கடந்து செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை சிறுத்தை அடித்து கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக மாலை 6 மணி முதல் வாகன ஓட்டிகள் தனியாக செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்தநிலையில் திம்பம் மலைஅடிவார சாலையில் புலி ஒன்று அடிக்கடி சாலையில் அலைந்து திரிகிறது. இதனை வாகனஓட்டிகள் நேரில் பார்த்துள்ளனர்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே 2 கி.மீ. தொலைவில் திம்பம் மலைப்பாதையின் அடிவாரத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் புலி ஒன்று ரோட்டை கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக பஸ், கார், லாரி, இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்கள் புலியை பார்த்துள்ளனர். தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்தி கொண்டார்கள். பின்னர் வாகனங்களில் இருந்தபடியே தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.
வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளி புலி மீது பட்டது. இதனால் புலியின் கண்கள் கூசியது. இதனால் ரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றிச் சுற்றி வந்தது. சுமார் 20 நிமிடத்துக்கு பிறகு புலி தானாகவே காட்டுக்குள் சென்றது. அதன்பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
திம்பம் மலைஅடிவார சாலையில் புலி நடமாட்டத்தால் வாகனஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.