புஞ்சைபுளியம்பட்டியில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை- பணம் திருட்டு

புஞ்சைபுளியம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-03-19 22:00 GMT
புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சவுடேஸ்வரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமாரவேல். இறந்துவிட்டார். அவருடைய மனைவி கமலம் (வயது 52). இவருக்கு யசோதா என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளார்கள். இதில் யசோதா திருமணம் ஆகி கோவையிலும், சந்தோஷ் திருமணம் ஆகி பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். கமலம் மட்டும் தனியாக புஞ்சைபுளியம்பட்டியில் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று கமலம் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்து கீழே உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பதறியடித்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த பொருட்கள், துணிகள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் நகையையும், ரூ.35 ஆயிரத்தையும் காணவில்லை.

இதுபற்றி அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு கமலம் வீட்டை பூட்டிவிட்டு மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்கள்.

பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரிய வந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் பதிவான கைரேகையை பதிவு செய்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்