கர்நாடக சட்டசபை சபாநாயகர் தீர்ப்பை ஒத்திவைத்தார்

கட்சி மாறி ஓட்டுப்போட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Update: 2018-03-19 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியான இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் வேட்பாளராக பாரூக் நிறுத்தப்பட்டார். சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு இருந்த பலத்தின் அடிப்படையில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்தார்.

கொறடா உத்தரவை மீறி அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஜமீர்அகமது கான், செலுவராயசாமி, பீமாநாயக், அகண்ட சீனிவாசமூர்த்தி, எச்.சி.பாலகிருஷ்ணா, இக்பால் அன்சாரி, ரமேஷ்பன்டிசித்தேகவுடா ஆகிய 7 பேரும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதையடுத்து அவர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் ஜனதா தளம்(எஸ்) கட்சி மனு கொடுத்தது.

அந்த மனு மீது சபாநாயகர் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் 19-ந் தேதி(அதாவது நேற்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. சபாநாயகர் கே.பி.கோலிவாட் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் செலுவராயசாமி, ஜமீர்அகமதுகான், எச்.சி.பாலகிருஷ்ணா, அகண்ட சீனிவாசமூர்த்தி உள்பட 7 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகினர். புகார்தாரர்களான எம்.எல்.ஏ.க்கள் நிங்கையா, பாலகிருஷ்ணா ஆகியோரும் நேரில் வந்திருந்தனர்.

கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜகோபால், “அரசியல் சாசனத்தின் 10-வது அட்டவணைப்படி டெல்லி மேல்-சபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கட்சி முகவருக்கு காட்டுகிறார்கள். அதன்படியே 7 எம்.எல்.ஏ.க்களும் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் முகவராக செயல்பட்ட ரேவண்ணாவுக்கு காட்டியே வாக்களித்தனர். அதனால் இது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் வராது. இந்த விஷயத்தில் சமூகநீதி கொள்கையை பின்பற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்“ என்றார்.

ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஆஜரான வக்கீல் நிசாந்த், “கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தாங்கள் கட்சி மாறி வாக்களித்ததாக அந்த எம்.எல்.ஏ.க்கள் கூறினர். இதுவே சட்டவிரோதம் தான். ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, மாற்று கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதை சட்டம் ஏற்காது. அதனால் அந்த 7 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்“ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சபாநாயகர் கே.பி.கோலிவாட், இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். வருகிற 23-ந் தேதி கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்