சசிகலா ‘பரோல்’ கேட்க முடிவு வக்கீல்கள் ஆலோசனை

சென்னை மருத்துவ மனையில் உள்ள கணவரை பார்க்க வேண்டி பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் ‘பரோல்’ கேட்க சசிகலா முடிவு செய்துள்ளார். இதுகுறித்து சிறை அதிகாரிகளுடன் வக்கீல்கள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2018-03-19 23:00 GMT
பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபற்றி ஊழல் தடுப்பு படை விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தனது கணவரை பார்க்க ‘பரோல்’ வழங்குமாறு சசிகலா மனு செய்தார். இதையடுத்து அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அவர் சென்னை சென்று, கணவரை பார்த்தார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் மீண்டும் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதன் காரணமாக கணவரை பார்க்க சசிகலா மீண்டும் ‘பரோல்’ கேட்க முடிவு செய்துள்ளார். இதற்கான மனுவை தயாரிக்கும் பணியில் சசிகலாவின் வக்கீல்கள் இறங்கியுள்ளனர்.

வக்கீல் அசோகன் உள்பட சில வக்கீல்கள் நேற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்து, அதிகாரிகளை சந்தித்து பேசினர். ‘பரோல்’ மனுவை தொழில்நுட்ப ரீதியிலான தவறுகள் நிகழாமல் எப்படி தயார் செய்வது என்பது குறித்து சில சட்ட நுணுக்கங்களை கேட்டு பெற்று சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சசிகலா இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ (புதன்கிழமை) ‘பரோல்’ மனுவை தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனை கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். ஆனால் சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்து உள்ளது. 6 மாதங்கள் முடிவடைய இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன.

அதனால் சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கணவரின் உடல்நிலையை கருதி சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்