முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டிடம் ரூ.4 கோடி மோசடி போலீஸ் விசாரணை

நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதான 5 பேரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டிடமும் ரூ.4 கோடி மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-19 23:15 GMT
பெங்களூரு,

பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராகவேந்திரா ஸ்ரீநாத் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்-நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள், தொழில்அதிபர்கள் உள்பட ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தார்கள். அவ்வாறு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தையும், அதற்கான வட்டியையும் கொடுக்காமல் ராகவேந்திரா ஏமாற்றி வந்தார்.

இதுதொடர்பாக தொழில்அதிபர் பாலாஜி என்பவர் முதலில் பனசங்கரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ராகவேந்திரா, நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களான சுரேஷ், நரசிம்மமூர்த்தி, நாகராஜ், பிரகலாத் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரிடம் ரூ.300 கோடி முதல் ரூ.500 கோடி வரை மோசடி செய்தது தெரிந்தது.

இதனால் பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். பின்னர் ராகவேந்திராவின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்ததாக கூறி பனசங்கரி போலீஸ் நிலையத்தில் மட்டும் 275 பேர் புகார் அளித்துள்ளனர். அதுபோல, ஜெயநகர், ஜே.பி.நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 75-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருக்கிறார்கள். அதன்பேரில், போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் மேலும் 1,800 பேரிடம் பணத்தை பெற்று கைதான 5 பேரும் மோசடி செய்தது தெரியவந்தது.

அவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும் ஒருவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கைதானவர்களில் சுரேஷ் என்பவர் பத்திரிகையாளர் ஆவார். அவர் மூலம் தான் ராகுல் டிராவிட்டிடம் முதலீடு பெற்று ஏமாற்றி இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தொடர்பாக ராகுல் டிராவிட் சார்பில் போலீசில் எந்த ஒரு புகாரும் அளிக்கப் படாமல் இருந்தது. இதுபோன்று, முன்னணி நடிகர்-நடிகைகள் சிலர் தங்களது பணத்தை இழந்து விட்டு புகார் அளிக்காமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் அந்த நிதி நிறுவனம் மீது ராகுல் டிராவிட் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2014-ம் ஆண்டு ராகவேந்திராவுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் ரூ.20 கோடி முதலீடு செய்ததாகவும், அந்த பணத்தில் ரூ.16 கோடியை பெற்று விட்டதாகவும், ஆனால் ரூ.4 கோடியை திரும்ப தராமல் மோசடி செய்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி சதாசிவநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் கூறுகையில், “முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.4 கோடி பணத்தை திரும்ப கொடுக்காமல் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ராகவேந்திரா மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் டிராவிட் புகார் அளித்ததுடன், அதற்கான ஆவணங்களையும் வழங்கியுள்ளார். ராகுல் டிராவிட் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,“ என்றார். கைதான 5 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்