வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரப்பிய கல்வி அதிகாரி மீது வழக்கு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச காலணிகள் தரமற்றவை என்று வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரப்பிய மண்டல கல்வி அதிகாரி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மண்டல கல்வி அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-19 22:00 GMT
கொள்ளேகால்,

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையை சேர்ந்தவர் நவ்சாத். இவர் அப்பகுதியில் காலணி விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள ‘பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி’ வழங்கும் திட்டத்தில் டெண்டர் எடுத்து பள்ளிகளுக்கு காலணிகளை வினியோகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை டவுன் போலீசில் மண்டல கல்வி அதிகாரி ஹாலப்பி சோமசேகரய்யா மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில், சாம்ராஜ்நகர் மண்டல கல்வி அதிகாரி ஹாலப்பி சோமசேகரய்யா, நான்(நவ்சாத்) டெண்டர் எடுத்து பள்ளிகளுக்கு வினியோகித்து வரும் காலணிகள் தரமற்று இருப்பதாக குற்றம் சாட்டி வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரப்பி வருகிறார்.

அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படிதான் நான் பள்ளி மாணவர்களுக்கு காலணிகளை வழங்கி வருகிறேன். ஹாலப்பி சோமசேகரய்யா கூறியுள்ள குற்றச்சாட்டால் எனக்கு அவப்பெயரும், நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, குண்டலுபேட்டை டவுன் போலீசார் மண்டல கல்வி அதிகாரி ஹாலப்பி சோமசேகரய்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் மீது குண்டலுபேட்டை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்