துப்பாக்கியால் சுட்டு விவசாயி படுகொலை குடிபோதையில் அண்ணன் வெறிச்செயல்

தளி அருகே குடிபோதையில் துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொலை செய்த அவரது அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-03-19 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள தேவர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் புட்டண்ணா. விவசாயி. இவரது மகன்கள் சங்கரப்பா (வயது 35), கணேஷ் (28). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். 2 பேரும் விவசாயம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை அவர்களின் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். இதைத் தொடர்ந்து அண்ணன்-தம்பி 2 பேரும் மது குடித்தனர். போதை அதிகமாகவே அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அந்த நேரம் கணேஷ் இரும்பு கம்பியால் அண்ணன் சங்கரப்பாவை தாக்கினார்.

அப்போது ஆத்திரம் அடைந்த சங்கரப்பா வீட்டுக்குள் சென்று தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து தம்பி கணேசை சுட்டார். இதில் கணேசின் இடதுபுற மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். தம்பியை சுட்டுக்கொலை செய்ததும், சங்கரப்பா நாட்டுத்துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொலை குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சங்கரப்பாவை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கணேசுக்கு திருமணமாகி மாலா (23) என்ற மனைவியும், அங்கிதா (3) என்ற மகளும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் கிருஷ்ணகிரி, தளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்