உடையார்தோட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் போதைப்பொருள் சோதனை

புதுச்சேரி உடையார்தோட்டத்தில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் போதைப்பொருள் சோதனை நடத்தினர்.

Update: 2018-03-19 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி உப்பளம் உடையார்தோட்டம் பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த உடையார்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆனந்து(வயது 23), ஆல்பர்ட்(19), மனோ(23), சூர்யா(21), சந்தோஷ்குமார்(23), அருண்குமார்(20), விஜய்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 4 அரிவாள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான சக்திவேல் மற்றும் அவரது தரப்பினரை கொலை செய்யும் நோக்கில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தி இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், தமிழரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் மோப்பநாயுடன் உடையார்பேட்டை பகுதிக்கு சென்றனர். அங்கு ஆனந்து உள்பட 7 பேரின் வீடுகளிலும் அந்த பகுதியில் உள்ள தோப்புகளிலும் கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது போதைப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்