சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய வெள்ளக்கல் கடத்தல்காரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

போலீசாரை கத்திய காட்டி மிரட்டிய வெள்ளக்கல் கடத்தல்காரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2018-03-19 22:00 GMT
சேலம்,

சேலம் அருகே வினாயகம்பட்டி டெலிபோன் காலனி சக்திநகரை சேர்ந்தவர் சகாதேவன் (வயது42). இவர் கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் கன்னங்குறிச்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கள்ளத்தனமாக 3 டன் வெள்ளக்கற்களை லாரியில் ஏற்றி கடத்த முயன்றார்.

அதை அரசு அதிகாரிகள் தடுத்தபோது தப்பி சென்று விட்டார். கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாதேவனை தேடிவந்தனர். அந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்றார். இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் அரசு புறம்போக்கு நிலத்தில் 5 டன்கள் வெள்ளக்கல் கடத்தியபோது மீண்டும் அதிகாரிகளை கண்டதும் சகாதேவன் தப்பி சென்று விட்டார்.

இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி கடந்த மாதம் 28-ந் தேதி அவரை கைது செய்ய முயன்றபோது, கத்தியை காட்டி மிரட்டி அவரை குத்தி கொலை செய்ய முயன்றதுடன், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்ததாகவும் கூறப்பட்டது. அன்றைய தினமே சகாதேவனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதான சகாதேவன் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் சிறையில் அடைக்க கன்னங்குறிச்சி போலீசார் மாநகர துணை கமிஷனர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தனர்.

அவர், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்ற போலீஸ் கமிஷனர் சங்கர், வெள்ளக்கல் கடத்தல் வழக்கு மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்ற சகாதேவனை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்