வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமி வயிற்றில் இருந்த 2 கிலோ முடி கட்டி அகற்றம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிறுமியின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடை கொண்ட முடியால் ஆன கட்டியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்தனர்.;
அடுக்கம்பாறை,
ஆற்காடு அருகே மாசாப்பேட்டை, அண்ணாநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவருக்கு திவ்யா (13), ஜனனி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஜனனி கடந்த 6 மாதமாக வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தாள். இதனையடுத்து ஜனனியை அவரது பெற்றோர், ஆற்காட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் சிறுமிக்கு எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்டது.
அப்போது ஜனனியின் வயிற்றில் இரைப்பை பகுதிக்கும், சிறுகுடலுக்கும் இடையே தலைமுடிகள் பந்துபோல் கட்டியாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் சிறுமியின் வயிற்றில் உள்ள முடி கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில், குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் கோபிநாத் தலைமையில், டாக்டர்கள் சதீஷ்குமார், அச்சுதன், மயக்கவியல் துறை டாக்டர்கள் கோமதி, பாலமுருகன், ராஜன், மனநலப் பிரிவு தலைவர் பிரபாகரராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது ஜனனியின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடை கொண்ட முடியால் ஆன கட்டியை அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் கோபிநாத் கூறியதாவது:-
சிறுமியின் வயிற்றில் முடியினால் ஆன கட்டி இருந்ததால்தான் வயிற்றுவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் விட்டிருந்தால் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியிருக்கும்.
இந்த சிறுமி ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி, அவரது முடியை அவரே பிடுங்கி சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறாள். இதனால் இரைப்பை முதல் சிறு குடல் வரை முடியால் ஆன கட்டி பரவியிருந்தது. இதற்கு ‘ராபுன்சல்’ என்று பெயர். இதுபோன்ற நோய் உலகிலேயே சுமார் 50 பேருக்கு மட்டுமே வந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்திருந்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகியிருக்கும். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஜனனிக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.