சாணார்பட்டி, வாழைக்காய்பட்டி பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சாணார்பட்டி, வாழைக்காய்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-19 22:00 GMT
கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சி ஒத்தக்கடை கிராமத்தில் சரளைமேடு பகுதி மக்களுக்கு அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று ஒத்தக்கடையில், திண்டுக்கல்-நத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாணார்பட்டி போலீசார் மற்றும் கணவாய்பட்டி ஊராட்சி செயலர் வெற்றிவேந்தன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டாரை பழுது நீக்கம் செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகேயுள்ள வாழைக்காய்பட்டியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதுவும் மிகவும் குறைந்த நேரமே வினியோகம் செய்யப்பட்டதால், பலருக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், திண்டுக்கல்-நத்தம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல்-நத்தம் சாலையில் சுமார் 30 நிமிடம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்