கொடைரோடு அருகே ஆடுகளை கடத்திய 3 பேர் கைது

கொடைரோடு அருகே ஆடுகளை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-19 21:45 GMT
கொடைரோடு,

கொடைரோடு அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வீரையா (வயது 43). விவசாயி. இவருக்கு அம்மையநாயக்கனூர் அருகே 4 வழிச்சாலையை ஒட்டி விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் 4 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தோட்டத்தில் ஆடுகளை மேயவிட்டு விட்டு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே அவர் வந்து பார்த்தபோது மர்மநபர்கள் 3 பேர் ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வீரையா கூச்சல் போட்டார். இருப்பினும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை.

இதையடுத்து மர்மநபர்கள் 4 ஆடுகளையும் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். ஆனால் காரின் எண்ணை வீரையா குறித்து கொண்டார். இதுகுறித்து அவர் அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆடுகளை கடத்தி சென்ற மர்மநபர்கள் பிடிக்க திட்டம் வகுத்தனர்.

காரின் எண்ணை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். மேலும் அந்த கார் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அனைத்து பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே அந்த கார் நிலக்கோட்டை அருகே நிற்பதை ரோந்து சென்ற நிலக்கோட்டை போலீசார் பார்த்தனர்.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும், பொதுமக்களின் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து அம்மையநாயக்கனூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த பால் தினகரன் (22), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜாராம் (22), திண்டுக்கல் அம்பேத்கர் நகரை சேர்ந்த முத்துமணி (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 4 ஆடுகளையும் கைப்பற்றியதோடு, கடத்தலுக்கு பயன் படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்