விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ‘ஜப்தி’
விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அரசு பஸ் ‘ஜப்தி’ செய்யப்பட்டது.
திருவண்ணாமலை,
தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்பாச்சர் தண்டா பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 34). இவரது மனைவி தேவேந்திரா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி இளங்கோ மோட்டார் சைக்கிளில் தானிப்பாடியில் இருந்து கீழ்பாச்சர் தண்டா பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளங்கோவுக்கு வலது கால் முறிந்தது. மேலும் மார்பு எலும்பு உடைந்தது. இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு விபத்தினால் படுகாயம் அடைந்த இளங்கோ தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பாதிக்கப்பட்ட இளங்கோவுக்கு ரூ.14 லட்சத்து 27 ஆயிரத்து 400 இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட இளங்கோவுக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை.
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இளங்கோ மீண்டும் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடந்த 2-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவச்சலம், விபத்தில் பாதிக்கப்பட்ட இளங்கோவுக்கு வட்டியுடன் ரூ.19 லட்சத்து 38 ஆயிரத்து 968 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இழப்பீடு வழங்க காலதாமதம் செய்தால், அரசு பஸ்சை ‘ஜப்தி’ செய்ய உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்ததால், நேற்று திருவண்ணாமலை நீதிமன்ற அமீனா வெங்கடேசன் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சேலத்திற்கு செல்ல தயாராக நின்று கொண்டிருந்த அரசு பஸ்சை ‘ஜப்தி’ செய்தார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.