கேரளாவில் இருந்து ரெயில் மூலம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவை வந்தார்

கேரளாவில் இருந்து ரெயில் மூலம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவைக்கு நேற்று இரவு வந்தார். அவரை கலெக்டர் ஹரிகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

Update: 2018-03-19 22:30 GMT
கோவை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து ரெயில் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு 8.45 மணிக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் புத்தகம் கொடுத்து வரவேற்றார். அப்போது மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், ஐ.ஜி.பாரி, போலீஸ் கமிஷனர் பெரியய்யா, துணை கமிஷனர் லட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கவர்னர் ரெயிலை விட்டு இறங்கி நடந்து வந்த போது அங்கிருந்த பயணிகளை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தபடி சென்றார். பின்னர் அவர் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் இரவு தங்கினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அவர் பங்கேற்கிறார். பின்னர் மதியம் கார் மூலம் சேலத்துக்கு புறப்பட்டு செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு அவர் தங்கியிருந்த தமிழக அரசு விருந்தினர் மாளிகையை சுற்றிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கவர்னர் பன்வாரிலால் வந்த கேரள எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைய வேண்டும். ஆனால் 45 நிமிடங்கள் தாமதமாக 8.45 மணிக்கு வந்தது. 

மேலும் செய்திகள்