கடன்தொல்லையால் ராணுவ வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

திருவட்டார் அருகே கடன்தொல்லையால் ராணுவ வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-19 22:15 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே வியனூர் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்குமார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரமீலா(வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிஷ்குமார் அப்பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி புதிய வீடு கட்டினார். புதிய வீடு கட்டியதில் கிரிஷ்குமார் குடும்பத்தினருக்கு கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மகள்களுடன் தூங்கச்சென்றார். மகள்கள் தூங்கிய பின் பிரமீலா போனில் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.


நேற்று காலை மகள் எழுந்து பார்த்தபோது, அறையில் படுத்திருந்த அம்மாவை காணவில்லை. வீட்டில் அனைத்து கதவுகளும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டனர். வீட்டின் மற்றொரு அறையின் கதவு மூடப்பட்டிருப்பதை கண்டு திறந்துபார்த்தனர். அப்போது, அங்கு பிரமீலா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

பின்னர், இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பிரமீலாவின் தந்தை மாதவன்பிள்ளை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் புதியவீடு கட்டியதில் ஏற்பட்ட கடன்தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்