ரெயிலில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல்: வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது

கரூருக்கு ரெயிலில் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த வங்கி அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-19 23:00 GMT
கரூர்,

மும்பை தாதரில் இருந்து நெல்லை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கர்நாடக மாநிலத்தில் இருந்து அம்மாநில மதுபாட்டில்களை கரூருக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மேற்பார்வையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கியவர்களில் 2 பேர் சந்தேகப்படும்படி கையில் 4 பைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில் ஒருவர் கரூர் வெங்கமேட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியின் துணை மேலாளராக பணிபுரிந்து வரும் ஜெகநாதன் (வயது 53) என்பதும், மற்றொருவர் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த சதீஷ்(36) என்பதும் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பைகளில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜெகநாதனின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகும். விடுமுறை நாட்களில் அவர் பெங்களூரு சென்று திரும்பும் போது, அங்குள்ள மதுபாட்டில்களை வாங்கி வந்து, இங்கு கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. சதீஷ் எலக்ட்ரிசீயனாக பணியாற்றி வருவதும், அவர் ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததும் தெரிந்தது.

இதையடுத்து ஜெகநாதன், சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 111 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த தனியார் வங்கி அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்