‘ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை’

காஞ்சீபுரத்தில் நடந்த பா.ம.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் ராமதாஸ், ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்ற போவதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Update: 2018-03-19 23:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில், இளைஞர்கள் எழுச்சி ஆண்டு விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது.

தமிழகத்தில் உச்சக்கட்ட ஊழல் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு ஊழல் குறித்தும் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே முழுமையாக மக்களிடம் கொண்டு செல்கின்றது.

தமிழக அரசின் ஊழல்கள் குறித்து கவர்னரிடம் பா.ம.க. சார்பில் 2 முறை மனு அளிக்கப்பட்டது. அதனை உன்னிப்பாக படித்த கவர்னர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கவர்னர் தற்போது தமிழகத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வினால் எந்தப்பலனும் இல்லை. கவர்னர் ஆய்வு செய்கின்றார். முதல்-அமைச்சர் வேறு வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில், நேர்மையான ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் அவர்களால் மத்திய அரசை தைரியமாக எதிர்க்க முடிகின்றது. ஆனால் தமிழகத்தில், ஊழல் ஆட்சி நடைபெற்று வருவதால் மத்திய அரசை எதிர்க்க முடியவில்லை. தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

இந்த காஞ்சி மண்ணிலே பிறந்த அறிஞர் அண்ணா, மதுவினால் வரும் பணம் அரசுக்கு தேவையில்லை என உறுதியாக இருந்தார். ஆனால் அவர் வழியிலே செல்வதாக கூறும் தி.மு.க. தமிழகத்துக்கு மதுவினை அறிமுகப்படுத்தியது. எம்.ஜி.ஆர். மதுக்கடைகளை அதிகப்படுத்தினார். ஜெயலலிதா, அரசாங்கமே மதுவை விற்கும் நிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையை பா.ம.க. மட்டுமே கொண்டுள்ளது.

சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போய்விட்டார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்ற போவதாக கூறுகின்றனர். இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. டி.டி.வி.தினகரன் ஹவாலா பணத்தில் சுற்றி வருகின்றார். இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

நல்ல ஆட்சியை பா.ம.க.வால் மட்டுமே தரமுடியும். காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவை இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, பொன்.கங்காதரன், திருக்கச்சூர் கே.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலாம்பாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்