இனி அரசியல் வேண்டாம்: திருப்பூரில் நாஞ்சில் சம்பத் பேட்டி

இனி அரசியலே வேண்டாம் என்றும், எந்த கட்சியின் அழைப்பையும் ஏற்கும் மனநிலை இல்லை என்றும் திருப்பூரில் நாஞ்சில் சம்பத் கூறினார்.

Update: 2018-03-19 22:00 GMT
திருப்பூர்,

டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காலை வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

நான் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருந்ததாக டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது என்னை காயப்படுத்தி உள்ளது. என்னுடைய உள்ளத்தின் நேர்மையான நடவடிக்கைகளை அவர் நம்பவில்லையா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

தமிழக முதல்-அமைச்சர் தான் பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக முதல்- அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவின் கவனத்தை திருப்ப வேண்டும்.

டெல்லியில் யார் ஆட்சி செய்தாலும், ஆடுகிற பொம்மலாட்டத்தை அனுமதிக்க முடியாது. அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்று, தேவைப்பட்டால் பிரதமர் வீட்டு முன்பு ஒரு மறியல் போராட்டத்தை நடத்தவும் தயாராக வேண்டும். அ.தி.மு.க.வின் எதிர்காலம் கவலைக்கிடமான நிலையில் தான் இருக்கிறது. ஆதாய சூதாடிகளின் கட்சியாக அந்த கட்சி மாறிவிட்டது. இதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

இனி எனக்கு அரசியல் கட்சி வேண்டாம். எந்த கட்சியின் அழைப்பையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. இனி இலக்கிய வீதிகளில் பயணம் செய்ய உள்ளேன். இளைய தலைமுறைக்கு பேச்சு பயிற்சி அளிக்க முடிவு எடுத்து விட்டேன். இந்த ஆண்டுக்குள் 12 புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்ற நல்ல முடிவில் உள்ளேன். எல்லா இடங்களிலும் பா.ஜனதாவுக்கு எதிரான ஒரு அலை வீசத்தொடங்கி விட்டது. மக்களை பா.ஜனதா அரசு பழிவாங்குகிறது. நாட்டில் ஏழை மக்களின் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்