மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டத்தை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் வழங்கினார்.;

Update: 2018-03-19 22:00 GMT
நெல்லை,

நெல்லை அபிஷேகபட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27 துறைகள் உள்ளன. இந்த துறைகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ்பாபு வரவேற்று பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழக முன்னாள் தலைவருமான அனந்தகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். 405 முதுகலை பட்டதாரி, 203 எம்.பில். பட்டதாரி என மொத்தம் 608 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகளை வாழ்த்துகிறேன். கிராமப்புற மாணவர்களாகிய உங்களுக்கு இந்த பல்கலைக்கழகம் நல்ல கல்வி கற்று கொடுத்து இருக்கும். பட்டம் பெற்று சமுதாயத்தில் கால் பதிக்கப்போகிறீர்கள். இந்த பட்டம் அடிப்படை தான். இதை வைத்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எதிர்மறை சிந்தனைகளுக்கு விடை கொடுத்து விட்டு, நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த 1964-ம் ஆண்டு கோத்தாரி கமிஷன் மூலம் பல்கலைக்கழகங்கள் முறைப்படுத்தப்பட்டன. தன்னாட்சி பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களுடன் தொடர்புள்ள தன்னாட்சி கல்லூரிகள், மத்திய-மாநில அரசுகளுடன் தொடர்புள்ள பல்கலைக்கழகங்கள் என மூன்று வகையாக பிரித்து நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 73 தேசிய அளவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களும், 47 மத்திய பல்கலைக்கழகங்களும், 370 மாநில பல்கலைக்கழகங்களும், 123 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 282 தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இந்திய அளவில் 3 ஆயிரத்து 500 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் படித்து வெளியே வரும் மாணவர்களை நீங்கள் சமாளிக்க வேண்டும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் மட்டும் இந்த உலகத்தில் போட்டி போட முடியும்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பேசும்போது, ‘முதுகலை பட்டம் பெற்று உலக வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறீர்கள். நீங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி திறனை வளர்த்தால் தான் நாம் முன்னேற முடியும். பன்னாட்டு நிறுவனங்கள் வளாகத்தேர்வு மூலம் இளைஞர்களை தேர்வு செய்கிறார்கள். ஆங்கில அறிவு சரியாக இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் நல்ல வேலை கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நிலை உங்களுக்கும் ஏற்படக்கூடாது. ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்‘ என்றார்.

தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் சுருளியாண்டி. புல முதல்வர்கள் கிருஷ்ணன், திலகம் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்