பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் மீண்டும் கைது
பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் நேற்று மீண்டும் திருவண்ணாமலை அருகே கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை நகர போலீஸ் உட்கோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மேற்பார்வையில், திருவண்ணாமலை ஊரக போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் மதியரசன், சந்திரசேகரன், முருகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
வேட்டவலம் கீரனூர் ஏரிக்கரை அருகே நேற்று தனிப்படை போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 40) என்பதும், தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் சீத்தாராம் பேட்டை பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவர், கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி வேட்டவலம் ராஜன்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் டாக்டர் சேகர் என்பவரது வீட்டில் 45 பவுன் நகையும், கடந்த ஜனவரி 22-ந் தேதி தானிப்பாடி மலமஞ்சனூர் கிராமத்தில் சையத் அமானுல்லா என்பவரது வீட்டில் 7 பவுன் நகையும், திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வா நகர் செல்வராஜ் என்பவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி 15 பவுன் நகை திருடியதும், திருடிய நகைகளை கே.வி.குப்பத்தில் உள்ள அவரது மனைவி மகேஸ்வரியிடம் கொடுத்து வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கே.வி.குப்பம் சென்று மணிகண்டனின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் இருந்த திருட்டு நகைகள் 55 பவுனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து போலீசார், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.