திருவண்ணாமலை அருகே மேலத்திகான் ஊராட்சி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவண்ணாமலை அருகில் உள்ள மேலத்திகான் ஊராட்சி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

Update: 2018-03-18 22:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகில் மேலத்திகான் ஊராட்சியில் ஏரி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் இந்த ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரி முழுவதும் ஆகாய தாமரை படர்ந்து வளர்ந்து காணப்படுகிறது.

மேலும் அதிகளவில் மீன்கள் வளர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரியில் இருந்த ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதை கண்டு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த ஏரியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் மீன்கள் இறந்து இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் ஏரியில் உள்ள மீன்கள் எவ்வாறு இறந்தது. ஏரி தண்ணீரில் யாரேனும் விஷம் ஏதாவது கலந்து உள்ளனரா என்று ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர். அத்துடன் ஏரி முழுவதும் ஆகாய தாமரை வளர்ந்து உள்ளது. இதனையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்