நகை கடை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது

திருமங்கலம் நகை கடை கொள்ளை வழக்கில், ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2018-03-18 23:15 GMT
அம்பத்தூர்,

சென்னை திருமங்கலம் 3-வது பிரதான சாலையில் உள்ள அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் கடந்த 6-ந்தேதி 10 கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பரமக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ஜான்பாஸ்கோ(வயது 35) மற்றும் அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளியான வியாசர்பாடியைச் சேர்ந்த தேவராஜ்(26) ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பழைய குற்றவாளிகளான இவர்கள் 2 பேர் மீதும் திருமங்கலம், அண்ணாநகர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தனித்தனியாக திருடி வந்த இவர்கள் இருவரும், திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் இருந்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் முதல் முறையாக கூட்டு சேர்ந்து திருமங்கலத்தில் உள்ள இந்த நகை கடையில் கொள்ளையடித்து உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 10 கிலோ தங்க நகைகளில், கைதான 2 பேரிடம் இருந்தும் இதுவரை 4 கிலோ நகைகளை மட்டும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மீதம் உள்ள நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் கைதான இவர்கள் இருவரும் அளித்த தகவலின்பேரில், இவர்கள் திருடிய நகைகளை விற்க உதவி செய்ததாக சென்னை புளியந்தோப்பு, கன்னிகாபுரம் தாஸ் நகரைச் சேர்ந்த ஆகாஷ் என்ற ராஜ்குமார்(21), அவருடைய சித்தப்பா ராகுல் மகிதுல் சேக்(34) ஆகிய மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும், ஏற்கனவே இதுபோல் கொள்ளையர்களிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கி, சவுகார்பேட்டை பகுதியில் விற்பனைசெய்ய முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று உள்ளனர்.

ராகுல் மகிதுல் சேக், சவுகார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்ப்பதால் திருட்டு நகைகளை அவர் சுலபமாக விற்று விடுவதுடன், இதற்காக 30 சதவீதம் வரை கமிஷன் பெற்று வந்ததும் போலீஸ் விசாரணையில தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொள்ளை வழக்கில் இதுவரை கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கைதானவர்களிடம் இருந்து மேலும் நகைகள் பறிமுதல் செய்யவேண்டியது உள்ளது. மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து இதுபோல் வேறு எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? எனவும் விசாரணை செய்ய வேண்டியது உள்ளது.

எனவே இவர்களை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளதாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்