புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணையில் தீ விபத்து

புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்.

Update: 2018-03-18 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட டி.வி.எஸ். கார்னர் பகுதியில் உள்ள மறுப்பிணி சாலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணை சுமார் 60 ஏக்கரில் உள்ளது. இந்த புல்பண்ணையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாய்ச்சப்படுகிறது. இந்த புல் பண்ணையில் இருந்து புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் தங்களது வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு புல்களை வாங்கி செல்கின்றனர். இவர்களுக்கு 3 கிலோ எடை கொண்ட புல்கட்டு ரூ.6–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புல் பண்ணை மூலம் புதுக்கோட்டை நகராட்சிக்கு ஆண்டிற்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த புல் பனிணையில் சுமார் 12–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் புல் பண்ணையில் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தொடர்ந்து தீ மள மளவென பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நகராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் பணியில் நகராட்சி தண்ணீர் லாரியும் ஈடுபடுத்தப்பட்டது. இருப்பினும் புல்கள் பண்ணையில் உள்ள சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்து இருந்த புற்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் கணேஷ்நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்