வேல்ராம்பட்டு ஏரியில் படகு சவாரி: கவர்னர் கிரண்பெடி தொடங்கிவைத்தார்

புதுவை வேல்ராம்பட்டு ஏரியில் படகு சவாரியை கவர்னர் கிரண்பெடி தொடங்கிவைத்தார்.

Update: 2018-03-18 22:15 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி தூய்மை இந்தியா இயக்க திட்ட பணிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் நீர்நிலைகள் புனரமைப்பிலும் அக்கறை காட்டுகிறார்.

அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே வேல்ராம்பட்டு ஏரி பகுதியை பார்வையிட்டார். அப்போது புதர்கள் மண்டி, குப்பை கொட்டும் இடமாக இருந்த ஏரியை அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து அரசு துறைகளின் உதவியுடன் சீர்செய்ய நடவடிக்கை எடுத்தார். மாணவ, மாணவிகளை கொண்டு புதர்களையும் அகற்றினார்.

அதன்பின் ஏரியை சுற்றிலும் இரும்பு கம்பி வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் ஏரிக்கரையில் பொதுமக்கள் வாகனங்களில் சிரமமின்றி செல்ல தார்சாலையும் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவித்தார்.

தொடர்ந்து அவர் கனகன் ஏரி பகுதியில் கவனம் செலுத்தினார். அந்த ஏரியையும் தூர்வார செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு படகு சவாரியையும் தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில் மீண்டும் கவர்னர் கிரண்பெடி வேல்ராம்பட்டு ஏரி மீது கவனம் செலுத்தினார். கனகன் ஏரி போன்று வேல்ராம்பட்டு ஏரியிலும் படகுவிட நடவடிக்கை எடுத்தார். அதன்படி வேல்ராம்பட்டு ஏரியில் நேற்று பரீட்சார்த்த அடிப்படையில் படகு சவாரியை தொடங்கிவைத்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

இந்த ஏரியின் உருமாற்றத்துக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. இதை இன்னும் மேம்படுத்த வேண்டும். ஏரியில் கழிவுநீரை கலக்க செய்யக்கூடாது. ஏரியில் படகு சவாரி நடத்துவதுடன் ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடித்து அதை ஏரிக்கரையிலேயே சமைத்து உண்ணுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த பொறுப்பினை சுய உதவி குழுக்களிடம் ஒப்படைக்கலாம். ஏரியை பாதுகாக்க தன்னார்வலர்கள் முன்வரவேண்டும். புதுச்சேரி நகராட்சி சுற்றுலா பயணிகள் அமருவதற்கான இருக்கை வசதியையும், கழிப்பிட வசதியையும் செய்துதர வேண்டும். மின்துறை விளக்கு வசதியை உருவாக்கிட வேண்டும். ஏரியை பாதுகாக்க வாட்ஸ் அப் குழுவினையும் உருவாக்க வேண்டும். எனக்கு என்று அதிகாரம் இல்லை, உங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது. நான் உங்களை ஒருங்கிணைக்கும் பணியைத்தான் செய்கிறேன். அனைவரும் இணைந்து புதுச்சேரியின் மேம்பாட்டிற்காக உழைக்கவேண்டும். பொதுப்பணித்துறையின் தலைமையில் ஏரியை பாதுகாக்க ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும். அதில் வேளாண்துறை, வனத்துறை, காவல்துறை, நகராட்சி அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, வனக்காப்பாளர் குமார், கண்காணிப்பு பொறியாளர் அறிவழகன், செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, மீன்வளத்துறை இயக்குனர் வின்சென்ட்ராயர், வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி, புதுவை நகராட்சி ஆணையர் கணேசன், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்