புதுச்சேரி மாநிலத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி மையம் அமைக்க வேண்டும்: மத்திய அரசிடம், அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி மையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளரிடம், அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.;

Update: 2018-03-18 22:45 GMT
காரைக்கால்,

காரைக்காலில் உள்ள அமைச்சர் கமலக்கண்ணன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

அண்மையில் டெல்லி சென்ற நான், மத்திய பெட்ரோலியத் துறை இணைச் செயலர் அமர்நாத்தை சந்தித்தேன். அவரிடம், கடந்த முறை டெல்லி வந்தபோது, ஓ.என்.ஜி.சி. தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் சாஸ்திரி சங்கரை சந்தித்து, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கல்வித்திறனை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களுக்காக ரூ.20 கோடியை சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் தருமாறு கோரிக்கை வைத்தேன்.

அதை விரைவில் ஒதுக்கித்தருவதாக அவரும் உறுதியளித்தார். அந்த தொகை கிடைக்கும்பட்சத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் மேம்பாடு அடையும். எனவே, அந்த நிதியை விரைவில் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும், மத்திய பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலர் அனில் ஸ்வரூப்பை சந்தித்து, புதுச்சேரி மாணவர்களுக்கான சீருடை, பாடப் புத்தகங்களுக்கான நிதியை, பழைய முறையில் ஒதுக்கித்தருமாறு வலியுறுத்தினேன்.

புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை முதன்மை செயலர் ஆனந்தகுமாரை சந்தித்தபோது, புதுவை மாநிலத்துக்கு சூரிய மின்சக்தி மூலம் 100 மெகா வாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து ஒரு யூனிட் ரூ.2.48-க்கு தரவேண்டும் எனவும், புதுச்சேரி மாநிலத்தில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கான மையம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட புதுச்சேரி மாநில அரசுத்துறை உயர் அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்புடன் இருந்து தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்