பண்ருட்டி அருகே உயிரோடு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு

பண்ருட்டி அருகே உயிரோடு எரிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். எனவே அவரது கணவர் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-03-18 22:00 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 45). தொழிலாளியான இவர், ஏற்கனவே திருமணமானவர். இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

மது குடிக்கும் பழக்கம் உடைய மணிகண்டன், தினமும் மது குடித்து விட்டு செல்வியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 11-ந் தேதி இரவு மது குடிக்க பணம் தருமாறு செல்வியிடம், மணிகண்டன் கேட்டார். அதற்கு செல்வி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், செல்வி கழுத்தில் அணிந்திருந்த நகையை தாலி சங்கிலியை பறித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செல்வி மீது, மண்எண்ணெயை ஊற்றி மணிகண்டன் தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த செல்வியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து செல்வி, மருத்துவமனையில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பண்ருட்டி போலீசார் மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்து, பண்ருட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் செல்வி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மணிகண்டன் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்ததை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.

மேலும் செய்திகள்