ஓட்டலில் ரூ.2 லட்சம் திருடிய சிறுவன் கைது கண்காணிப்பு கேமரா மூலம் பிடிபட்டான்

கும்பகோணத்தில் வேலை பார்த்த ஓட்டலில் ரூ.2 லட்சத்தை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான்.

Update: 2018-03-18 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு ஒரு தனியார் ஓட்டல் உள்ளது. கடந்த 16-ந் தேதி இரவு வழக்கம்போல் ஓட்டல் ஊழியர்கள் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் வந்து பார்த்தபோது ஓட்டலின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஓட்டலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கும்பகோணம் வெங்கட்ரமணா நகரை சேர்ந்த தஞ்சையன் (வயது61), கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் போலீசார் ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தினர். இதில் ஓட்டலில் வேலை பார்த்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் பின்பக்க கதவு வழியாக வந்து பணத்தை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியை சேர்ந்தவன் என்பதும், 20 நாட்களுக்கு முன்பு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.

மேலும் ஓட்டலில் இருந்து ரூ.2 லட்சத்தை திருடியதையும் அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து போலீசார் ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்