தொழிலாளியை கொலை செய்த உறவினர் கைது

கொரட்டூரில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-18 22:45 GMT
அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் திருமுல்லைவாயல் ரோடு பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 54). அதே பகுதியில் உள்ள மரக்கடையில் மரம் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மூர்த்தி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

பாடி மூர்த்திசாமி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (33). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் மூர்த்தியின் சகோதரி மகன் ஆவார். நேற்று விடுமுறை என்பதால் மூர்த்தியின் வீட்டிற்கு பாலாஜி வந்தார். இருவரும் வீட்டில் வைத்து மது அருந்தினர்.

அப்போது மூர்த்தியை பார்க்க பெண் ஒருவர் வந்து சென்றதாக தெரிகிறது. அப்போது பாலாஜி, ’ஏன் அந்த பெண் உங்களை பார்க்க வந்தாள்?’ என்று கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மூர்த்தியை காலால் பாலாஜி மிதித்துதள்ளினார். இதில் சுவரில் மூர்த்தியின் தலை மோதியதால் அடிபட்டு ரத்தம் வழிந்தது.

இது தெரியாமல் மது போதையில் இருந்த பாலாஜி, மூர்த்தி மயங்கி விட்டதாக நினைத்து வெளியே சென்று விட்டார். இந்த சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் ரத்தம் வழிந்த நிலையில் மூர்த்தி இறந்து போனதை பார்த்து கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அதே பகுதியில் போதையில் சுற்றித்திரிந்த பாலாஜியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்