போலி ஆவணம் மூலம் பணி நியமனம்: தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்கு

மதுரையில் போலி ஆவணங்கள் தயாரித்து கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றதாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2018-03-18 21:30 GMT

மதுரை,

மதுரையில் தாசில்தாராக பணிபுரிந்து வரும் சிவக்குமார் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்றதாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மதுரையை சேர்ந்த சண்முகவேல் சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து 1989–ல் பணியின்போது இறந்து விட்டார். இவரது மனைவி புஷ்பா ராஜாமணி அரசு உதவிபெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். சண்முகவேலுக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகனான பாலசுப்பிரமணியன், தந்தை இறக்கும்போதே அரசு காப்பீட்டு கழகத்தில் ஊழியராக பணிபுரிந்துள்ளார். சண்முகவேலின் குடும்பத்தில் 2 பேர் அரசுப்பணியில் இருப்பதை மறைத்தும், போலி ஆவணங்கள் தயாரித்தும் சண்முகவேலின் மற்றொரு மகனான சிவக்குமார், கருணை அடிப்படையில் வாரிசு வேலை கோரி அரசுக்கு 1993–ல் மனு அளித்துள்ளார். மனுவை விசாரிக்க சென்ற அப்போதைய சாத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சேகர், வருவாய் அதிகாரி முனியாண்டி ஆகியோர் சண்முகவேலின் குடும்பத்தில் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்ற உண்மையை மறைத்து அறிக்கை அளித்துள்ளனர். அதன்பேரில் சிவக்குமாருக்கு அரசு பணி வழங்கப்பட்டு தற்போது தாசில்தாராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அரசை ஏமாற்றி மோசடி மூலம் பணி நியமனம் பெற்ற தாசில்தார் சிவக்குமார், இவரது சகோதரர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த சாத்தமங்கலம் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி சேகர், முன்னாள் வருவாய் அதிகாரி முனியாண்டி ஆகிய 5 பேர் மீது லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்