மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரை வழிமறித்து சரமாரியாக கத்திக்குத்து

பேரிகை அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களை மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். அவர்கள் 2 பேரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Update: 2018-03-18 22:15 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை பக்கமுள்ளது கே.என்.தொட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், பேரிகை காலனி பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை கே.என்.தொட்டியைச் சேர்ந்த லட்சுமய்யா என்பவரின் மகன் சீனிவாசன் (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (19) ஆகிய 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பேரிகை அருகே சென்று கொண்டிருந்த போது அவர்களை மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் வழிமறித்தனர். அவர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் 2 பேரையும் சரமாரியாக குத்தினார்கள். இதில் 2 பேருக்கும் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. அவர்களை கத்தியால் குத்தியதும் அந்த கும்பல் தப்பி ஓடியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த சீனிவாசன், ஜெயராமன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தி குத்தில் காயம் அடைந்தவர்கள் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை கத்தியால் குத்தியவர்கள் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பேரிகை சுற்று வட்டார பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 2 பேரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக் ராஜ் மற்றும் பேரிகை போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பேரிகை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்