திருப்பூர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர்,
தே.மு.தி.க.வின் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைந்த திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். முருகம்பாளையம் பகுதி செயலாளர்கள் காளியப்பன், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் அக்பர் கலந்துகொண்டு பேசினார். பகுதி செயலாளர்கள் செல்வகுமார், துரை, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மயில்சாமி, வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், பொருளாளர்கள் பன்னீர் செல்வம், பொன்னா சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்தும், கட்சியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு தமிழக அரசு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியதோடு நிறுத்தாமல், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் முறையான அடிப்படை வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பஸ்நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருப்பூர் தெற்கு, வடக்கு மாவட்ட ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.