மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயற்சி தொழிலாளி கைது

நடத்தையில் சந்தேகம் அடைந்ததால், மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-03-18 20:30 GMT
ஏர்வாடி,

நடத்தையில் சந்தேகம் அடைந்ததால், மனைவியின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நடத்தையில் சந்தேகம்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கும், திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பித்தோப்பை சேர்ந்த ஆறுமுகநயினார் மகள் மாலினி (27) என்பவருக்கும் திருமணம் முடிந்து, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் மாலினியின் நடத்தையில் சத்தியராஜ் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மாலினி, தனது தந்தை ஆறுமுகநயினாரிடம் கூறினார். இதனை தொடர்ந்து ஆறுமுகநயினார் முத்துசாமிபுரத்துக்கு சென்று மகள், மருமகனிடம் பேசினார். பின்னர், அந்த 2 பேரையும் குழந்தையுடன் தனது ஊரான நம்பிதோப்புக்கு அழைத்து வந்தார்.

கிரைண்டர் கல்லை போட்டார்

அங்கு மாமனார் வீட்டில் மனைவி, குழந்தையுடன் சத்தியராஜ் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த மாலினி தலையில் சத்தியராஜ் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார். இதனால் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் திரண்டு சென்றனர். இதை பார்த்த சத்தியராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாலினியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்தியராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்