ஊட்டியில் கன மழை கொட்டியது; கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு

ஊட்டியில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2018-03-18 21:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டியில் நேற்று காலையில் இருந்தே வெயில் அடித்தது. பகல் 12 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மதியம் 1 மணியளவில் ஊட்டி நகரில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை தொடர்ந்து 1½ மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், கூட்ஷெட் சாலை, ஹில்பங்க் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட், படகு இல்ல சாலை, ரெயில்வே போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றதை காண முடிந்தது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தேங்கி நின்ற மழைநீரை, அங்கு கடை வைத்திருப்பவர்கள் அடைப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றினர்.

படகு இல்ல சாலையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் பெருகி கிடந்த மழைநீரில் ஒரு வாகனம் சிக்கியது. ஊட்டியில் இருந்து காந்தலுக்கு செல்லும் அரசு பஸ்கள் தண்ணீரை வேகமாக தள்ளிக்கொண்டு சென்றன. சைக்கிள் ஓட்டி வந்த ஒரு நபர் சாமர்த்தியமாக அப்பகுதியை கடந்து சென்றார். அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் திரும்பி சென்றன.

ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் இருந்து மணல், குப்பைகள் அடித்து வரப்பட்டன. ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகள் குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் நின்று விட்டு, மழை விட்டவுடன் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். கொட்டும் மழையில் சில வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.

ஊட்டி சேரிங்கிராஸ் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை உள்ள குன்னூர் சாலையில் மழைநீர் சூழ்ந்து இருந்தது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. ஊட்டியில் பெய்த கனமழை காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லத்துக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊட்டி நகரில் நேற்று ஒரே நாளில் 40 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மாலை 4 மணிக்கு பின்னர் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஊட்டியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. 

மேலும் செய்திகள்