ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்

ராமநாதபுரத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-03-18 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள எம்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ரோமன்சர்ச் பகுதிக்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் ரோமன் சர்ச் பகுதியில் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு காவிரி குடிநீர் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படு கிறது. இந்தநிலையில் கடந்த பல நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் ரூ.6 முதல் ரூ.10 கொடுத்து லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக தனியார் லாரிகளும் வரவில்லை. தண்ணீர் எடுத்துவரும் பகுதியில் தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளதால் தண்ணீர் எடுக்க முடியவில்லை என்று கூறி தனியார் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எங்கள் பகுதிக்கு தண்ணீர் லாரியும் வரவில்லை.

காவிரி தண்ணீர், தனியார் லாரி எதுவும் கிடைக்காததால் நாங்கள் அனைவரும் குடிநீருக்காக சொல்ல முடியாத அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்