சேலம் அருகே லாரியை திருடி விற்க முயன்ற 2 பேர் கைது

சேலம் அருகே லாரியை திருடி விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட போது சிக்கினர்.

Update: 2018-03-18 22:00 GMT
சேலம், 

சேலம் அருகே வீராணம் குப்பனூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை லாரி ஒன்று டீசல் நிரப்புவதற்கு வந்தது. அங்குள்ள ஊழியர்கள் டீசலை நிரப்பியதும், பணத்தை கொடுத்துவிட்டு டிரைவர் லாரியை வெளியே ஓட்டி வரமுயன்றார். அப்போது பெட்ரோல் விற்பனை நிலையத்தின் ஒரு பகுதியில் லாரி திடீரென மோதியது.

இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, லாரியில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் வந்த மற்றொருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, லாரி மோதியதால் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்ததால் அதை சரி செய்வதற்கான தொகையை கொடுத்துவிட்டு லாரியை எடுத்து செல்லுமாறு ஊழியர்கள் தகராறு செய்தனர்.

ஆனால் அதற்கான தொகையை கொடுக்க முடியாது என்று டிரைவர் தெரிவித்து தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஊழியர் ஒருவர், லாரியின் உரிமையாளரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, உங்களுடைய டிரைவர் லாரியை மோதிவிட்டு நஷ்டஈடு கொடுக்காமல் மிரட்டுகிறார் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர், என்னுடைய லாரியை திருடிவிட்டனர் என்றும், அந்த லாரியை அங்கேயே நிறுத்தி வையுங்கள் என்றும் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களிடம் கூறினார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரியில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை திருடி வந்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் வீராணம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அரூர் தொட்டம்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவர் அங்குள்ள பேக்கரி அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்றபோது, அந்த லாரியை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர், அந்த லாரியை வேளாங்கண்ணியை சேர்ந்த குணா (வயது 26), திருவாரூரை சேர்ந்த சதாம்உசேன் (27) ஆகியோர் திருடி வந்ததும், அவர்கள் இருவரும் வீராணம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தகராறில் ஈடுபட்டபோது சிக்கிக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து லாரி திருடர்களை அரூர் போலீசாரிடம் ஒப்படைக்க வீராணம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்