அரசு ஊழியர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்

அரசு ஊழியர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று நாகையில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2018-03-19 04:15 IST
நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட பேரவை கூட்டம் நாகையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.டி.அன்பழகன், மாவட்ட பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை வட்ட செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். மாநில செயலாளர் சி.ஆர்.ராஜ்குமார் கலந்து கொண்டு, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமும் வழங்க வேண்டும்.

வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் 16-வது தேசிய மாநாட்டையொட்டி ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் வருகிற 24-ந் தேதி நடக்கும் மாவட்ட தலைநகர் பேரணியில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனே மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் ஜோதிமணி, காயாம்பூ, பொது செயலாளர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்