மானிய விலையில் 1,919 ஸ்கூட்டர்கள் வழங்க இலக்கு, கலெக்டர் லதா தகவல்

மாவட்டத்தில் இந்த ஆண்டு மானிய விலையில் 1,919 ஸ்கூட்டர்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-18 21:30 GMT
சிவகங்கை,

பெண்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி தரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை அடையும் வகையில் பல திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்தினை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக பெண்களுக்கான திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் ஊரக பகுதி, பேரூராட்சி பகுதி, நகராட்சி பகுதி மற்றும் மாநகராட்சி பகுதிகளைச் சார்ந்த உழைக்கும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்குவதற்கு உதவியாக மானிய தொகை ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது இவை இரண்டிலும் எது குறைவோ அத்தொகையை தமிழக அரசு முழுமையாக மானியமாக வழங்குகிறது.

சிவகங்கை மாவட்டத்திற்கு 2017-18-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள பெண்களின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1,328 வாகனங்களும், 3 நகராட்சி மற்றும் 12 பேரூராட்சிப் பகுதிகளுக்கு 591 வாகனங்களும் என மொத்தம் 1,919 ஸ்கூட்டர்கள் வழங்குவதற்கு இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருக்கு மானியத்தில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்