வில்லியனூரில் திடீர் பதற்றம்: தி.க. பொதுக்கூட்டத்தில் செருப்பு வீச்சு; பா.ஜ.க.வினர் ரகளை, போலீஸ் தடியடி

வில்லியனூரில் நடந்த தி.க. பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. மேலும் பா.ஜ.க.வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

Update: 2018-03-17 23:15 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் நேற்று இரவு திராவிடர் கழகம் சார்பில், மணியம்மையார் நினைவு தின பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக சென்னையில் இருந்து வீரமர்த்தினி, அருள் மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது கடவுள் குறித்து விமர்சித்து பேசியதாக தெரி கிறது. இதனால் ஆத்திரம் அடைந்து கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேடையை நோக்கி திடீரென்று செருப்பை வீசியதாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

உடனே அப்பகுதியில் பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். தொடர்ந்து கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தி.க.வினருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், கம்யூனிஸ்டு கட்சியினரும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து காரசாரமாக பேசி வாக்குவாதம் செய்தனர். போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை. பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூட்டம் நடத்தக்கூடாது என கூறி ரகளையில் ஈடுபட்ட னர். அப்போது ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி உதைத்துக் கொண்டனர். இதனால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்