மாநில அரசின் முடிவுக்கு உறுதுணையாக இருப்பேன், கவர்னர் கிரண்பெடி பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Update: 2018-03-17 23:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி நேற்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து தனியாக வெளியே நடந்து வந்தார். அப்போது பாதுகாவலர்கள் யாரும் தன்னுடன் வரவேண்டாம் எனக்கூறிவிட்டார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு பின்புறம் உள்ள அரவிந்தர் ஆசிரமத்திற்கு நடந்தே சென்றார். அங்கு சுமார் 10 நிமிடம் அவர் தியானம் செய்தார்.

அங்கிருந்து கடற்கரையில் தலைமை செயலகம் எதிரில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை மணல்பரப்பு அமைக்கும் பகுதிக்குச் சென்றார். அங்கு பணி நிறைவு பெறாததால் யாரும் கடலில் இறங்கி அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கவர்னர் சென்றபோது அங்கு பணியில் இருந்த காவலர்கள், கவர்னர் கிரண் பெடியை அடையாளம் தெரியாமல் உள்ளே வரக்கூடாது என்றுகூறி அவரை தடுத்தனர். அப்போது சிறிது தூரத்தில் இருந்து அதிகாரிகள் ஓடிவந்து, கவர்னர் குறித்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து செயற்கை மணல் பரப்பு பகுதிக்குச் சென்று கிரண்பெடி பார்வையிட்டார். கடலுக்குள் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் இறுதிபகுதி வரை நடந்தே சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்று கேட்டறிந்தார். அதிகாரிகள் அந்த திட்டம் குறித்த வரைபடத்தை காண்பித்து விளக்கம் அளித்தனர். பின்னர் அவர் அங்கிருந்து தலைமை செயலகம் முன்பாக வந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

அப்போது கவர்னர் மாளிகை அருகே இருந்த ஒரு தேனீர் கடைக்கு சென்று அங்கு என்ன உள்ளது என்று கேட்டு டீ ஆர்டர் செய்து குடித்தார். பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.

இதன்பின் அங்கு நிருபர்களிடம் கவர்னர் கிரண்பெடி கூறியதாவது:-

இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்குள் இந்த இடம் மணல் பரப்புடன் கூடிய கடற்கரையாக மாறும். புதுச்சேரி கவர்னராக பதவியேற்றபோது நான் குறிப்பிட்ட காலம்தான் புதுச்சேரியில் இருந்து பணியாற்றுவேன். அதன்பிறகு சென்றுவிடுவேன் எனக் கூறி இருந்தேன். தற்போது எனக்கு புதுச்சேரியை விட்டு வெளியேற விருப்பம் இல்லை. கடவுள் கருணை உள்ளது.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். இதுவரை நான் ஒரு ஆண்டு 10 மாதங்கள் கவர்னராக பணியாற்றி உள்ளேன். சுற்றுலாத்துறை வளர்ச்சிப்பாதையில் செல்கிறது. சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் சரியான பாதையில் செல்கிறோம். அமைச்சர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். கல்வித்துறையும் வளர்ச்சி அடைந்துள்ளது. புதுச்சேரி அமைதியான, ஆன்மிக பூமியாக திகழ்கிறது.

கடைமடை பகுதியான காரைக்காலுக்கு காவிரி நீர் வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சரியான பாதையில் செல்கின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்பேன். ஊழல், முறைகேடு போன்ற விஷயத்தில் புதுவை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்