பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அருகே உள்ள கின்னூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மகன் ராமு (வயது 45), மீனவர். இவர் தனது தம்பி முருகன் என்பவருடன் படகில் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம்(46), நடராஜன்(45) ஆகியோரும் மீன் பிடிக்க சென்றனர்.
இதையடுத்து ஆழ்கடலுக்கு சென்ற அவர்கள் மீன்பிடித்துக் கொண்டு, இரவு 9 மணி அளவில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில் முருகன் உள்ளிட்ட 4 பேரும் படகில் இருந்து கடலில் விழுந்தனர். அப்போது படகில் இருந்து விழுந்த வலையில் ராமு சிக்கிக் கொண்டார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முருகன் உள்ளிட்ட 3 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர்.
இந்த நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு மற்றொரு படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் கடலில் படகு கவிழ்ந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் அருகில் சென்று பார்த்த போது, ராமு வலையில் சிக்கி இறந்து கிடந்தது தெரிந்தது. பின்னர் அவர்கள் வலையில் சிக்கியிருந்த ராமுவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கடலில் மூழ்கி பலியான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முருகன் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.