தனியார் அலுவலகத்தில் ரூ.6.80 லட்சம் திருட்டு பூட்டை உடைத்து மர்மஆசாமிகள் கைவரிசை

நாமக்கல்லில் தனியார் அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2018-03-17 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 42). வளையப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (38). என்ஜினீயர்களான இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து நாமக்கல்-பரமத்தி சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் உள்ள மேஜை டிராவில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்தை வைத்து விட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலையில் அலுவலகத்திற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மேஜை டிராவில் வைத்து இருந்த ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தாமோதரன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்