கோவை நகர வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை நகர வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2018-03-17 23:00 GMT
கோவை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் விழா கோவை கிரேடவுனில் உள்ள தலைமை சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஓ.கே.சின்னராஜ் எம். எல்.ஏ. தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு தையல் எந்திரம், சலவை பெட்டி, சில்வர்குடம், வேட்டி- சேலை ஆகிய நலத்திட்ட உதவிகளை பொது மக் களுக்கு வழங்கினார். மேலும் அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதா தமிழக மக்களுக்காக யாரும் செய்யாத திட்டங்களை செய்து சாதனை படைத்தார். மக்கள் நல திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சி 1 ஆண்டை நிறைவு செய்துள்ளது. மீதம் உள்ள ஆண்டுகளை கடந்தும் அதற்கு பிறகும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் புதிய பல திட்டங்களையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. கோவை நகர வளர்ச்சிக்காக புதிய மேம்பாலங்கள், குடிநீர் வினியோக திட்டங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, பா.வெ.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜு, மாநகர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் நா.கருப்பசாமி, மாநில பஞ்சாலை பிரிவு செயலாளர் தனகோபாலன், மண்டல செயலாளர் சி.டி.சி.சின்னராஜ், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை பொறுப்பாளர் யு.ஆர்.கிருஷ்ணன், ஆட்டோ அன்சர், கைத்தறி முத்து சாமி, சி.டி.சி.கருணாகரன், டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் பால்ராஜ், நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்