விவசாயி விஷம் குடித்து தற்கொலை முதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விரக்தி

தேன்கனிக்கோட்டை அருகே முதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் விரக்தி அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-03-17 22:30 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சிவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி மீனா (35). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதால் மல்லேஷ், மஞ்சுளா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்த முதல் மனைவி மீனாவை, குடும்பம் நடத்த வருமாறு மல்லேஷ் அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டுக்கு வந்த அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

பரிதாப சாவு

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்து விட்டதால் விரக்தி அடைந்த மல்லேஷ் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மல்லேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்