ஆம்பூர் அருகே பலத்த மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
ஆம்பூர் அருகே பலத்த மழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே பழைய மின்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). கூலி தொழிலாளி. இவரது மனைவி கிட்சா (44). இவர்களுக்கு அகிலா, அர்ச்சனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ராஜா அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த தொகுப்பு வீடு மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூரை சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளே படுக்க பயந்து வீட்டுக்கு வெளியே உள்ள கூரை போட்ட பகுதியில் தூங்கினர்.
அதிகாலை நேரத்தில் ராஜா வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. வீட்டுக்கு வெளியே தூங்கியதால் ராஜாவின் குடும்பத்தினர் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தொகுப்பு வீடுகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கட்டிய நாள் முதல் இதுவரை வீடுகளை பழுது பார்க்கவில்லை. இதனால் இங்குள்ள மற்ற தொகுப்பு வீடுகளும் எப்போதும், எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வீடுகளை பழுதுபார்க்க கோரி மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த வீடுகளை பழுதுபார்க்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தொகுப்பு வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு மோசமான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை பழுதுபார்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.